திருவாரூர், ஆக. 04 –
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 430 கிராம ஊராட்சிகளிலும் பாரத் நெட் திட்டத்தின் கீழ் இணையதள வசதி வழங்கப்பட உள்ளதென மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது அதற்கான பணி முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறதெனவும், இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதெனவும், கண்ணாடி இழை இணைப்பானது 85 சதவீதம் மின் கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திட்டத்திற்கான உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்படும் எனவும், மேலும் திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பொறுப்பேற்பார் எனவும் அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். எனவும், மேலும் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நிறுவப்படும் உபகரணங்கள் அனைத்தும் அரசின் உடைமைகளாகும். மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.




















