நாகர்கோவில்:
மார்த்தாண்டம் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அந்த மாணவி திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மாணவியை பல இடங்களிலும் தேடினார்கள். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தனிப்படை அமைத்து போலீசார் மாயமான மாணவியை தேடி வந்தனர்.
அப்போது பள்ளியாடி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் மாஸ்கஸ் மெல்புஷன் (வயது 21) என்பவர் அந்த மாணவியை அடிக்கடி சந்தித்து பேசி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார், மாஸ்கஸ் மெல்புஷன் பற்றி விசாரித்தனர். அப்போது அவரும் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் அவரது செல்போன் டவர் மூலம் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். இதில் பெங்க ளூருவில் அவர் இருப்பதாக செல்போன் டவர் காட்டியது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பெங்களூருக்கு விரைந்து சென்று தேடுதல்வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் மாஸ்கஸ் மெல்புஷன் தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் மாயமான மாணவியும் மாஸ்கஸ் மெல்புஷனின் நண்பரான பள்ளியாடி பகுதியை சேர்ந்த சுபின் என்பவரும் அவர்களுடன் இருந்தார். போலீஸ் விசாரணையில் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை மாஸ்கஸ் மெல்புஷன் பெங்களூருக்கு கடத்திச் சென்றதும், அங்கு வாடகை வீட்டில் அவரை அடைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டு மார்த்தாண்டம் கொண்டுவந்து விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு மாஸ்கஸ் மெல்புஷன் மற்றும் அவரது நண்பர் சுபின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.