புதுடெல்லி:

சத்தீஸ்கர் மாநிலம் துராகானில் நடந்த பழங்குடியினர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, விஜய் மல்லையா, மெகுல் சோக்ஷி, லலித்மோடி, நீரவ் மோடி போன்றோருக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் பணம் அளித்துள்ளது.

ஆனால் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 3.50 மட்டும் அளிக்கிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி வழங்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவித்த போது பா.ஜனதா எம்.பி.க்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். இது நகைச்சுவையாக இல்லையா?

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமானம் கிடைப்பது உறுதி செய்யப்படும். விவசாயிகளின் வங்கி கணக்கில் அந்த தொகை நேரடியாக செலுத்தப்படும்.

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அனைவரது வங்கி கணக்கிலும் தலா ரூ. 15 லட்சம் டெபாசிட் செலுத்தப்படும் என்றும் புதிதாக 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, கருப்பு பணத்துக்கு எதிரானது என்றால் வங்கிகளுக்கு வெளியே நேர்மையான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டுமா? பொது மக்கள் பணம் பறிக்கப்பட்டு தொழில் அதிபர்களின் கடனை தள்ளுபடி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோல் மேலும் தொழில் அதிபர்களின் ரூ. 12 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய மோடி திட்டமிட்டுள்ளார். சத்தீஸ்கரில் விவசாயிகளின் கடனை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 6 மணி நேரத்தில் தள்ளுபடி செய்தது.

பண மதிப்பிழப்பு நட வடிக்கைக்கு பிறகு ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகளும், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்த வரி மாற்றி அமைக்கப்படும். அது உண்மையான ஜி.எஸ்.டி. வரியாக இருக்கும். ஒரேயொரு வரிதான் இருக்கும். 5 வரிகள் இருக்காது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here