திருவள்ளூர், ஆக. 06 –
திருவள்ளூர் மாவட்டம் குமரன் சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுதாகர் இவரது மகள் பொன்னேரி அடுத்துள்ள காஞ்சவாயல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்.
இந்நிலையில் நேற்று காலையில் பள்ளிக்கு டி 36 என்ற பேருந்தில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் மெத்தூர் பகுதியில் உள்ள பேரூந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். பள்ளி மாணவி இறங்குவதை கவனிக்ககாத ஓட்டுநர் பேருந்தை உடனே எடுத்துள்ளார். அப்போது தடுமாறி மாணவி சாலையில் தலைக்கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு கை,கால் மற்றும் உடல் பகுதிகளில் சிராய்ப்பு ஏற்பட்டும், சில பற்கள் சிதைந்தும் போனது. அதனை சற்றும் பொருட்படுத்தாமல் பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சேகர் என்பவர் மாணவியை அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். இச்சம்பவம் தொடர்பான தகவல் குமரன்சேரி பகுதியில் உள்ள உறவினர்களுக்கு தெரியவர ஒட்டுமொத்த கிராமத்தினரும் ஒன்று திரண்டு அப்பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டு, அவ்வழியே வந்த பேருந்தை மடக்கி பிடித்து மாணவிக்கு இரண்டு பற்கள் உடைந்ததற்கான.இழப்பீட்டு தொகையும், மாணவி விழுந்ததை சற்றும் பொருட்படுத்தாத ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அவ்வூர் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு பேரூந்தை விடுவித்து கலைந்து சென்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.




















