திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

ஆனால் காலம் காலமாக சபரிமலையில் கடைபிடிக்கப்படும் ஐதீகத்தை மீறி இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் கேரளாவில் போராட்டம் நடத்தி வருவதால் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து உள்ளது.

சபரிமலை கோவில் நடைதிறக்கும்போது எல்லாம் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே பிந்து, கனகதுர்க்கா ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.

தற்போது மாசி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று பகல் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 இளம்பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர்களிடம் எடுத்துக் கூறினார்கள். போலீசாரின் அறிவுரையை ஏற்று அந்த 4 இளம்பெண்களும் திரும்பிச் சென்றனர்.

சபரிமலை கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கேரள அரசு சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பது என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அரசின் பதில் மனுவில் ‘‘கேரளாவில் உள்ள கோவில்களை திருவிதாங்கூர் கொச்சி தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த தேவசம்போர்டு சட்டப்படி 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களை தேவசம்போர்டு உறுப்பினராக நியமிக்கலாம். அதன்படி 1950-ம் ஆண்டு முதல் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தேவசம்போர்டில் உறுப்பினராக பணியாற்றி உள்ளனர். கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இளம்பெண்கள் இருக்கும்போது சபரிமலை கோவிலுக்கு ஏன் இளம்பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்யக்கூடாது?’’ என்று கூறப்பட்டு உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here