தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வல்லம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வல்லம் டிஎஸ்பி நித்யா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தஞ்சாவூர் – திருச்சி நெடுஞ்சாலையில் வல்லம் பிரிவு சாலை அருகில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஆண் மற்றும் பெண் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் இருவரையும் வல்லம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மணவாளநல்லூரை சேர்ந்த வேல்முருகன் (37) என்பதும், அவருடன் வந்த பெண் தேனி, ஆண்டிப்பட்டி மூலக்கடை பகுதியை சேர்ந்த சோலையம்மாள் (38) என்பதும் தெரிய வந்தது.
பின்னர் அவர்கள் கொண்டு வந்த சாக்குப்பையை போலீசார் சோதனை செய்ததில் அதில் 25 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் திருச்சி கொண்டு வந்து திருச்சியில் இருந்து தஞ்சை நாகை வழியாக இலங்கை கடத்த இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் மற்றும் சோலையம்மாளை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.






















