மாங்காடு, மார்ச். 23 –
சென்னை அடுத்த மாங்காடு அருகே உள்ள மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தர்மராஜ் இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
தர்மராஜின் இளைய மகள் பானுமதி (25), இளங்கலை படிப்பை முடித்துள்ள நிலையில், தற்போது முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்நிலையில் சம்பவம் நாளான நேற்று மாலை பானுமதி அறையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பானுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பானுமதி உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பானுமதியின் செல்போனை வாங்கி அவர் தற்கொலைக்கு முன்பாக தொடர்புக் கொண்டுள்ள நபர்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மேலும் பானுமதி ராஜஸ்தானில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்று விட்டு நேற்று காலைதான் ராஜஸ்தானில் இருந்து வந்துள்ளார் என்பதும், காவல் உதவி ஆய்வாளர் தேர்வு எழுத போவதாக தனது அக்காவிடம் தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் அவர் திடீர் தற்கொலை செய்துக் கொள்ள முடிவு எடுத்ததின் காரணம் என்ன ? தற்கொலை செய்துக்கொள்ளும் அளவிற்கு அவரைத் தூண்டிய நிகழ்வு என்ன ? என்பது போன்று எழும் அடிப்படைக் கேள்விகளை முன் வைத்து பல்வேறு கோணங்களில் பல தரப்பினரிடம் விசாரணை நடைப்பெற்று வருவதாக மாங்காடு போலீசார் தெரிவித்தனர்.
மேலும், குறிப்பாக இத் தற்கொலை தொடர்பாக பானுமதி ஏதாவது கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்பதையும் ஆராய்ந்து வருவதாகவும் ஆனால் அதுப்போன்ற தடயங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்ற தகவல் தெரிவிக்கிறது .மேலும் பானுமதியின் உடற்கூறு ஆய்வு முடிந்து இன்று மாலை 3 மணி அளவில் அவரது உடல் அவரது குடும்பத்தாரிடம் போலீசாரல் ஒப்படைக்கப்பட்டது





















