மயிலாடுதுறை, மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், சேண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 37-ம் ஆண்டு பால்குட திருவிழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் மற்றும் அழகுக் காவடி எடுத்து வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
குத்தாலம் அருகேவுள்ள சேண்டிருப்பு கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் புகழ்பெற்ற அருள் மிகு ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பால்குட சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதுப்போன்று இவ்வாண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் அம்பாள் சிம்ம வாகனம், சூரிய பிரபை, யானை வாகனம், சப்பரம், குதிரை வாகனம், உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா காட்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து ஏராளமான பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர்.
முத்து மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் புஷ்ப அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். மேலும் பக்தி பரவசத்துடன் 20 அடி நீளம் அலகு குத்தியும் , பூ பல்லக்கினை சுமந்தும், பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு வருகை தந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தமிழ் சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.