மயிலாடுதுறை, ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி கண்ணில் தென்பட்ட சிறுத்தை ஏழு நாட்களாக பிடிபடாமல் வனத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
மயிலாடுதுறை நகரில் புகுந்த சிறுத்தை கண்காணிப்பு வளையத்தை மீறி புறநகர் பகுதியான ஆரோக்கியநாதபுரத்திற்கு சென்றது. அதன் பிறகு இரண்டு நாள் கழித்து மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் மேற்கு புறத்தில் அமைந்துள்ள காஞ்சி வாய் கிராமத்தில் சிறுத்தை நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது காவேரி ஆறு மஞ்சள் ஆறு வீரசோழன் ஆறு நண்டலாறு ஆகியவற்றின் நீர் வழிப்பாதைகளை பயன்படுத்தி சிறுத்தை சென்று இருப்பது வனத்துறையின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்றும் இன்றும் காஞ்சிவாய் மற்றும் கருப்பூர் ஆகிய கிராமங்களில் நண்டலாற்றின் நடுவே சிறுத்தையின் கால் தடமும் கரையோரத்தில் அதன் எச்சமும் வனத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் நந்தலாறு, மற்றும், வீரசோழன் ஆறு ஆகியவற்றின் இடையே சிறு சிறு ஓடைகளும் அதற்கான மதகுகளும் இருப்பதால் பொதுப்பணித் துறை உதவியுடன் வரைபடம் தயாரித்து கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
அதற்காக ஆறு கூண்டுகளும் 25 கேமராக்களும் கருப்பூர், காஞ்சிவாய் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் சிறுத்தையிடம் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையும் கிராம மக்களுக்கு வனத்துறையினர் தெரிவித்து வருவதாக வனத்துறை மாவட்ட அதிகாரி அபிஷேக் டோமர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.