திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தேர்தல் தூதுவர் அறிமுகம் மற்றும் தேர்தல் கீதம் வெளியீடு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற மத்திய தேர்தல் பொதுப் பார்வையாளர் அபு இம்ரான் தேர்தல் கீதத்தை வெளியிட்டார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு வகைகளில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநில அளவில், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் தூதுவர் மற்றும் தேர்தல் கீதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் அபு இம்ரான் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபு சங்கர் ஆகியோர் தேர்தல் கீதத்தை வெளியிட அதை தேர்தல் தூதுவரும் பின்னணி பாடகருமான கலைமாமணி மனோ பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட ஸ்ரீபெரும்புதூர், கோவைக்கு அடுத்து 3-ஆவது இடத்தில் திருவள்ளூர் தனி தொகுதி தொகுதி உள்ளது. அதனால் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் தூதுவராக கலைமாமணி பின்னணி பாடகர் மனோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கவிஞர் யுகபாரதியின் பாடல் வரிகளில் இசை அமைப்பாளர் சத்யா இசையில், சரவணக்குமார் இயக்கிய தேர்தல் கீதங்களுக்கு கலைமாமணி பாடகர் மனோ பின்னணி பாடியுள்ளார். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தேர்தல் கீதம் ஒலிக்கப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக பணம் வாங்க கூடாது என்பதையும் இந்த பாடல் வரிகள் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
























