கும்பகோணம், நவ. 8 –
அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அணை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் சிறப்பு ரத யாத்திரை நடத்தப்படுவது வழக்கம்.
புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக் காவிரியில் தொடங்கி, காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் வரை நதி நீரின் புனிதத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் நதி நீர் மாசுபடாமல் பாதுகாக்க வலியுறுத்தியும் சிறப்பு ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி 11 ஆம் ஆண்டு இதய ரத யாத்திரை குடகு மலையில் அகில பாரத சன்னியாசிகள் சங்க நிறுவனர் மற்றும் துணைத்தலைவர் சுவாமி ராமானந்தா தலைமையில் கடந்த 23ஆம் தேதி துவங்கியது. நேற்று மாலை கும்பகோணம் வந்த காவிரி ரத யாத்திரை ஒருங்கிணைப்பாளர் ஜகதாநந்தா சுவாமிகள் வித்யாம்பாள் கார்த்திகேயானந்தா யோகி சிவா பிரேமானந்தா சரஸ்வதி யாத்திரையில் பங்கேற்று அனைத்து படித்துறைகளிலும் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பாலக்கரை அருகில் உள்ள டபீர் படித்துறையில் வந்த ரத யாத்திரையை தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை சார்பில் செயலாளர் சத்திய நாராயணா பொருளாளர் வேதம் முரளி உறுப்பினர் முரளி அன்னை கருணை இல்லம் நிர்வாகி அம்பலவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வானவேடிக்கை முழங்கப் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்தனர்.
இதையடுத்து ரத யாத்திரையில் வந்த துறவியர் மற்றும் சன்னியாசிகள் டபீர் காவேரி படித்துறையில் காவிரித்தாய் சிலைக்கும் விநாயகர் சிலைக்கும் வாசனை திரவியங்கள் பால் தயிர் குங்குமம் திருநீறு சந்தனம் பன்னீர் உள்ளிட்ட திரவியப் பொடிகளால் கும்பாபிஷேக ஆராதனையுடன் தீப தூப ஆர்த்தி நடத்தினர். இதைத்தொடர்ந்து காவிரித் நதியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர் தொடர்ந்து மகாமக குளம் படித்துறையிலும் சிறப்பாக ஆர்த்தி வழிபாடு நடைபெற்றது.