தஞ்சாவூர், மார்ச். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் மாதம் தோறும் நடத்தப்பட்டு வரும் தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள் பயிற்சி முகாமில் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள் குறித்த செய்முறை விளக்கம் நடைபெற்றது.

நெட்டி என்பது ஒருவகை நீர்வள தாவரமாகும். தஞ்சாவூர் மண் இந்த தாவரங்களுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. குளம் மற்றும் ஏரிகளில் நிறைந்து காணப்படும். அதன் தண்டுப் பகுதியினை எடுத்து காயவைத்து, தோலினை நீக்கி கலைப் பொருட்கள்‌ உருவாக்குவது தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள் ஆகும்.

இதற்கு கூர்மையான கத்தி மட்டுமே பயன்படுத்தப்பட்டு தக்கை போல் எடை குறைவாக உள்ள நெட்டியில் தந்தம் போல் மின்னுகின்ற வகையில் பல வகையான கலைப் பொருட்கள் செய்வது இதன் சிறப்பம்சமாகும். முதலில் மாலைகள் மற்றும் தோரணங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. பின்னாளில் கோயில்கள் மற்றும் சிற்பங்களும் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு கலைஞர்கள் கயல்விழி மற்றும் ராதா ஆகியோர் இப்பயிற்சியினை வழங்கினார்கள். பள்ளி மாணவர்கள் முதல் குடும்ப தலைவிகள், முதியவர்கள் வரை இப்பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்று நெட்டி மூலம் தங்களால் இயன்ற கலைப் பொருட்களை தயாரித்தனர்.

இந்த பயிற்சி மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் தொடர்ந்து இந்த கலைப் பயிற்சியினை மேற்கொண்டு அழிந்து வரும் தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகளை பாதுகாப்போம் என அனைவரும் தெரிவித்தனர்.

இப்பயிற்சி முகாமில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் விஜயகுமார், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here