கடலூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ராஜ்குமார்
காடாம்புலியூர் பகுதியில் பழங்குடி இருளர் சமூகத்தினருக்கு அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல் கவரப்பட்டு திருக்குளம் பகுதியை சேர்ந்த இந்து பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
மேலும் அவர்கள் அளித்த மனுவில் தங்கள் சமூகத்தை சேர்ந்த 93 குடும்பத்தினருக்கு பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் ராஜகணபதி நகரில் அரசு மனை பட்டா வழங்கியது. அதனைத் தொடர்ந்து மேல் கவரப்பட்டு பகுதியில் வசிக்கும் 13 பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்று வீடு கட்ட முயற்சி செய்தபோது ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கூரை வீடு கட்டி இருந்த சிலர் தங்களை தகாத வார்த்தையால் பேசி மிரட்டுகின்றனர். எனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்களை அப்புறப்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.




















