புதுச்சேரி, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தகவல் தொழில்நுட்ப வளத் தொகுப்பின் கீழ், புதுச்சேரியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணினி (டேப்லெட்) வழங்கும் நிகழ்ச்சி காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மேலும் அவ்விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி மேலும் சபாநாயகர் செல்வம், கல்வித் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துக் கொண்டு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச கைக்க்கணினியை (டேப்லெட்) வழங்கினார்கள்.
முன்னதாக அவ்விழாவில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் ரங்கசாமி
ஏழை மாணவர்கள் படிப்பதற்காக அரசு பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சில பெற்றோர்கள் தனியார் பள்ளியில் சேர்த்தால் மாணவர்கள் ராக்கெட்டில் பறக்கின்ற உயரத்தை தொடுவார்கள் என்ற மாயையில் உள்ளதாகவும், மேலும் மாணவர்கள் எங்கே படித்தாலும் வீட்டில் கவனம் இருந்தால்தான் அவர்கள் நன்றாக படிக்க முடியும் எனவும், மேலும் பொதுவாக இன்றைய நிலையில் 90 சதவீத மதிப்பெண் எடுக்கின்ற மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்க்கும் நிலையும், 25 சதவீத மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும் நிலைதான் உள்ளது. ஆனால் அரசுக் கல்வித்துறையினர் செலுத்தி வரும் அதிக கவனம் காரணமாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களே என எடுத்துரைத்து முதல்வர் ரங்கசாமி பெருமிதம் கொண்டார்.
முதலமைச்சரை தொடர்ந்து பேசிய தமிழிசை செளந்தரராஜன், பல புத்திசாலிகள் கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பதால் அவர்களை ஆசிரியர்கள் அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், குழந்தைகள் என்பவர்கள் கண்ணாடி டம்ளர் போன்றவர்கள் என்றும், அதனால் ஆசிரியர்கள் அவர்களை கை நழுவாது பார்த்து பாதுகாப்பாக கையாள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் குழந்தைகள் திறமையானவர்கள் மட்டுமின்றி மிகவும் உணர்ச்சிப் பெருக்குடன் திகழக்கூடியவர்கள். அதனால் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை ஆசியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், குழந்தைகள் பல பழக்க வழக்கத்திற்கு உணர்ச்சி வயப்பட்டு ஆளாகி விடுகின்றனர். அதனால் அவர்களை தொடர்ந்து கண்காணித்து சிறுமாற்றம் அவர்களிடையே தெரிய வந்தால் உடனடியாக அவர்களது பெற்றோர்களிடம் தெரிவிக்கும் போதுதான் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்றார்.




















