திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்…
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே ஆலாத்தூர் கிராமத்தில் ஸ்ரீவிசாலாட்சியம்பிகை சமேத ஸ்ரீவிஸ்வநாதர் சிவாலயம் மற்றும் ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பெருமாள் ஆலயம் ஆகிய சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்களுக்கு ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மிகவும் தொன்மை வாய்ந்த இவ்விரு ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு, கடந்த 3 தினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள் கலந்துக் கொண்டு யாகவேள்வி பூஜை நடத்தி யாகசாலையில் உள்ள புனித தீர்த்த கடங்களுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, இன்று யாகசாலை பூஜையின் நிறைவாக மகாபூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் புனித தீர்த்தம் அடங்கிய கடங்களை சுமந்து வர மேல தாளங்களின் ஓசை முழங்க ஆலய பிரகாரத்தினை வலம் வந்து ஆலய கோபுர விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தி மஹா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடந்தேறியது.
தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் பெருமாள் ஆலய கோபுர விமான கலசங்கள் மீதும், சிவாச்சாரியார்கள் சிவாலயத்தின் கோபுர விமான கலசங்கள் மீதும் புனித தீர்தத்தை ஊற்றியும், மகா தீபாராதனை காண்பித்தும் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
இவ்விரு ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் உள்ளூர் மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் அச்சிற்பு மிகு விழாவிற்கு வருகைத் தந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் கும்பாபிஷேக விழாவினை க் கண்டும் மனமுருகி சுவாமி மற்றும் கோபுர தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
மேலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவிஸ்வநாதர் சிவாலயத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சுவாமி சிலைகள் களவு போயிருந்த நிலையில் அச் சிலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அச் சுவாமி சிலைகளுக்கு, இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவின் போது சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது என்பது மேலும் இவ்விழாவின் சிறப்பாகும்.





















