திருவாரூர், பிப். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …

திருவாரூர் அருகே குடவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டிடத்தை அதே பகுதியில் அமைக்க வலியுறுத்தி நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடவாசலில் 2017 ஆம் ஆண்டு டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அது தற்காலிகமாக குடவாசல் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், அதனை அப்பகுதியில் அறநிலையைத் துறைக்கு சொந்தமான இடத்தில் துவங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வந்தது. இருப்பினும் அக்கல்லூரியை திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செல்லூர் பகுதிக்கு மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வந்தது.

அதற்கிடையே அப்பகுதி மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் அதனைத் தடுக்கும் விதமாக முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இரா. காமராஜ் சட்டமன்றத்தில் பல்வேறு முறை அப்பிரச்சினை தொடர்பாக கேள்வி எழுப்பியும், மேலும் அதே பகுதியில் அக் கல்லூரி அமைய நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்நிலையில் தற்போது செல்லூர் பகுதியில் இக்கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு 13.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதனை கண்டித்து நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் காமராஜர் சார்பில் நன்னிலம் தொகுதி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள் கூட்டாக சென்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ – யிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர் .

அதில் கொரடாச்சேரி பகுதியில் கல்லூரி அமைக்கும் பணியை நிறுத்தி மாணவர்கள் மற்றும் பகுதி மக்களின் விருப்பத்திற்கு இணங்க குடவாசல் பகுதியிலேயே அக் கல்லூரிக்கான கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பாப்பா சுப்பிரமணியம், ஏஎன்ஆர் . பன்னீர்செல்வம், சாந்தி தேவராஜன், ஒன்றிய குழு தலைவர்கள் சங்கர், கிளாரா செந்தில், விஜயலட்சுமி குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here