கும்பகோணம், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில், இன்று சுவாமி விவேகானந்தரின் 127 வது ஆண்டு விஜய விழாவினை முன்னிட்டு முழு அன்னாரது திரு உருவ வெண்கல சிலைக்கு நாகாலாந்து மாநிலம் ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ராமகிருஷ்ணா மடத்தலைவர்கள் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மேலை நாடுகள் பலவற்றிற்கு சென்று, பாரத பாரம்பரிய பெருமைகளை நிலைநாட்டிய பின்னர் ராமேஸ்வரம் வந்தடைந்த அவர், அங்கிருந்து ரயில் மூலம் கும்பகோணத்திற்கு கடந்த 1897 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, 4 மற்றும் 5ம் தேதி ஆகிய 3 நாட்கள் இங்கேயே தங்கியிருந்து போர்ட்டர் டவுன் ஹாலில், வேதாந்த பணி எனும் தலைப்பில் உரையாற்றிய போதுதான் விடுதலை போராட்டத்திற்கும், விடுதலைக்கு பிறகு நாட்டை கட்டமைப்பதற்குமான பல்வேறு வழிகாட்டுதல்கள் அமைந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக அவர் அந்நாளில் ஆற்றிய உரையின் போது, எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், லட்சியத்தை அடையும் வரை ஓயாது செல்லுங்கள் என்ற சிறப்புமிகு வரிகள் கும்பகோணத்தில் அவரால் முழங்கப்பட்டவையாகும்.
இந்நிலையில் சுவாமி விவேகானந்தரின் 127 வது ஆண்டு விஜய விழாவினை முன்னிட்டு, அவர் உரையாற்றிய போர்டர் டவுன் ஹாலில், முழு உருவ வெண்கல சிலைக்கு நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மற்றும் ராமகிருஷ்ணா மடத்தலைவர் ஸ்ரீமத் விமூர்த்தானந்த மகராஜ், சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குநர் காமகோடி, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து அவ்விழாவினை முன்னிட்டு விளையாட்டு, ஒவியம், பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரசுளிப்பு விழா நடைபெற்றது. அதில் ஏராளமான மாணவ மாணவிகள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






















