திருவாரூர், டிச.21 –
திருவாரூர் மாவட்டம், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயன்பாட்டிலிருந்த எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதடைந்தது. அதனால், கடந்த 8 மாதங்களாக இக்கருவி செயல்பாட்டில் இல்லாமல் அம்மருத்துவமனைக்கு வரும் மருத்துவப் பயனாளிகள் தனியார் பரிசோதனை மையங்களில் எடுக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு சமூக இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் உடனடியாக எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை பராமரித்து மருத்துவ பயனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகளை எழுப்பி போராட்டத்திலும் ஈடுப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் விரைவில் எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி அமைக்கப்பட உள்ளதாக, மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி. ஜோசப்ராஜ் தெரிவித்துள்ளாா்.
அதுக்குறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு மெடிக்கல் சா்வீஸ் நிறுவனம் சாா்பில் புதிய எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி பொருத்துவதற்கான ஏற்பாடுகள் ஓரிரு வாரத்தில் நடைபெற உள்ளது. வெளி நோயாளிகள் பிரிவில் இந்த கருவியை பொருத்துவதற்கான இடமும் தோவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஒரு சில வாரங்களில் இந்த கருவி மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த 8 மாத காலமாக மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் செயல்பாட்டில் இல்லாததால், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் அவா்களுக்கு முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எம்ஆா்எஸ் ஸ்கேன், வெளியிடங்களில் எடுப்பதற்கு உதவி செய்யப்பட்டது எனவும், தனியாா் நிறுவனம் புதிய எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி பொருத்துவதற்கு கால தாமதம் செய்யப்பட்டதால், தற்போது அரசு சாா்பில் இந்த கருவி பொருத்தப்பட உள்ளது என அப்போது மருத்துவ முதல்வர் தெரிவித்தார்.