கும்பகோணம், டிச. 18 –
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் என்பது இறைவனுடைய மாதமாக இந்து பக்தர்களால் கருதப்படுமாதமாகும். பக்தர்கள் கடவுளை மனமுருகி வழிபடுவதென்றால் அது இம்மாதமாகவே பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகாமையில் உள்ள அசூர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் மற்றும் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலயம் என்பது அப்பகுதிய் வெகு பிரசித்திப்பெற்ற ஆலயமாக விளங்கி வருகிறது.
அத்திரு ஆலயத்தில் ஆண்டு தோறும் மார்கழி திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அதுபோல இவ்வாண்டும் அவ்வாலயத்தின் 11 ஆம் ஆண்டினை முன்னிட்டு, கடந்த கார்த்திகை மாதம் 3 ஆம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள், மாலை அணிவித்து, அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனுக்கும், ஸ்ரீ அய்யனருக்கும் விரதம் இருந்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனுக்கும், ஸ்ரீ அய்யனாருக்கும், அவ்வாலயத்தில் தினமும் சிறப்பு அபிஷேக, பூஜைகள் மற்றும் தீபாராதனையுடன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நிகழ்வும் நடைபெற்றது.
மேலும் அவ்வாலயத்தின் முக்கிய நிகழ்ச்சியான மார்கழி மாத 1 ஆம் தேதி முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் டபீர் காவிரி படித்துறையில் எழந்தருள வாண வேடிக்கையுடன், 50க்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், கரகம், வேல், காவடி எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று ஆலயம் வந்தடைந்தனர்.
தொடர்ந்து ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் மற்றும் ஸ்ரீ அய்யனாருக்கும் சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் அண்ணாதுரை, மற்றும் கிராமவாசிகள் நாட்டாமைகள் பஞ்சாயத்தார்கள் இளைஞர்கள் ஊரார் பிரமிக்கும் வகையில் வெகுச்சிறப்பாக செய்திருந்தனர்.




















