திருவாரூர், டிச.10 –
மிக பழமையானதும், நரசிம்மருக்கு என தனி ஆலயமாக விளங்கும் திருவாருர் மாவட்டம் பெருமங்கலம் அருள்மிகுஸ்ரீதேவி, பூதேவி சமேத யோக நரசிம்மர் ஆலயத்தில் பவித்ரோஸவத்தை முன்னிட்டு, அருள்மிகு யோக நரசிம்மருக்கும், உற்சவர் சீனிவாச பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கும் திருமஞ்சனமும் தீர்த்தவாரியும் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் யோக நரசிம்மருக்கு அரிசிமாவு, மஞ்சள், திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து யோக நரசிம்மருக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.
மேலும், பவித்ரோஸவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை சிறப்பு யாகம் நடைபெற்று மஹா பூர்ணாகஹுதி நடைபெற்று சக்கரத்தாழ்வார் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஆலயத்தின் உள்ளே தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரத்துடன் மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வினை காண வந்திருந்த திரளான பக்தர்கள் யோக நரசிம்மரையும் சக்கரத்தாழ்வாரையும் மனமுருகி வழிப்பட்டனர். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் குங்கும தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.