கும்மிடிப்பூண்டி, நவ. 29 –
திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 1000 குடும்பங்களில் 2744 தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் தாய் நாடான இலங்கை வாழ் தமிழர்களின் விடுதலைக்காக போராடி தமது உயிரை ஈந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் நினைவாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்த அடிப்படையில் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று முன் தினம் இரவு சிப்காட் போலீசாரின் அனுமதியோடு முகாமில் வாழும் இலங்கை தமிழர்கள் சார்பாக இந்த மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு போரில் இறந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 400 பேர்களின் படங்களை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
போராளிகளின் ஒரு பெரிய கல்லறை உள்பட மொத்தம் 7 கல்லறை அமைக்கப்பட்டு ஜோதி ஏற்றப்பட்டது. தொடர்ந்து உயிரிழந்த அத்தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். இந்நிகழ்வில் முகாமை சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுகணக்கான முகாம் வாசிகள் பங்கேற்றனர். கும்மிடிப்பூண்டி முகாமில் போலீசாரின் அனுமதியுடன் இத்தகைய நிகழ்வு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் எனத் தெரிய வருகிறது.