கும்பகோணம், செப். 01 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அரியநாயகிபுரம், என்கிற அரியதிடல் ஆதி நந்தவனத்திற்குள் பூர்வீகமாகியுள்ள அன்னதான சிவன் திருக்கோவிலில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ ருத்ர மஹா காளியம்மன் ஆலயமாகும்.
ஆண்டு தோறும் அவ்வாலயத்தில் ஆவணி திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டும் அவ்விழா கடந்த 27 ஆம் தேதி அம்மனுக்கு, திருமஞ்சனம் காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு அலங்காரங்களோடு பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்து அருள்பாலித்தார்.
மேலும் அவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று அரசலாற்றங்கரையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள், பால்குடம், சக்தி கரகம், வேல், அக்னி கொப்பரை, காவடி, எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து ஆலயம் வந்தடைந்தனர்.
தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீருத்ர மஹா காளியம்மனுக்கு, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, பாலபிஷேகம் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் எதிர்வரும் 3 ஆம் தேதி, அருள்மிகு ஸ்ரீருத்ர மஹா காளியம்மன், வானவேடிக்கையுடன் வீதி உலா காட்சியும், அதனைத் தொடர்ந்து வருகிற 5 ஆம் தேதி, மகா காளியம்மன் அக்கா தங்கை திரு நடன வீதி உலா நிகழ்ச்சியும், வருகிற 6 ஆம் தேதி கஞ்சி வார்த்தல், விடையாற்றியுடன், இவ்வாண்டுகான நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெகுச்சிறப்பாக ஆலய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கிராமவாசிகள், அனைவரும் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.





















