சென்னை, ஆக. 29 –
தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த பேரறிஞர் அண்ணா 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்று சிறப்பு மிக்க இருமொழிக்கொள்கை எனும் தீர்மனத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
அந்நாள் முதல் இந்நாள்வரை தமிழ்நாடு அரசு அக்கொள்கையை பின்பற்றி வருவதோடு பல துறைகளிலும் தமிழின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், காலத்திற்கேற்ப தமிழை வளர்த்தெடுக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தமிழைச் சட்ட ஆட்சிமொழியாகக் கொண்டு வர வேண்டுமென்ற நோக்கத்தில் அதற்காக தயாராகும் வகையில், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம் மற்றும் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவு மூலமாகத் தமிழில் சட்டச் சொற்களஞ்சியம் தயாரித்து அச்சிடுவது, மாநில மற்றும் ஒன்றியச் சட்டங்கள், அவசரச் சட்டங்கள் மற்றும் அவற்றின் கீழ் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் அறிவிக்கைகளையும் தமிழில் மொழி பெயர்த்தல் ஆகியப் பணிகளைத் தொடர்ந்து அரசின் சட்டத்துறை செய்து வருகிறது.
மேலும் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்து அதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வந்தார்.
அதனை முன்னிட்டே கலைஞரின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடி வரும் இத் தருணத்தில், தமிழைச் சட்ட ஆட்சி மொழியாக்கும் அவரது கனவை நனவாக்கும் வகையிலும், மேலும் அனைத்து மக்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடும், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாகச் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்து அவற்றைப் பொது மக்கள் மற்றும் வழக்கறிஞர்களது பயன்பாட்டிற்காகக் கொண்டுச் செல்லும் நோக்கோடு அவர்களது வழி நடக்கும் இவ்வரசு முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது.
அதனால் அப்பணிக்காக மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக ரூ.3 கோடியும், பின்னர் தேவைக்கேற்பவும் நிதி ஒதுக்கீடு செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்























