செங்கல்பட்டு, மே. 19 –
செங்கல்பட்டு வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதிதாக டாடா நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இண்டஸ்ட்ரி 4.0 தளவாடங்ள் மற்றும் உபகரணங்களையும் அப்போது அமைச்சர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் படித்து வரும் மாணவர்களை சந்தித்த அமைச்சர் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இவ்வாய்வினைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கணேசன், தற்போது தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கின்ற மற்றும் படித்து முடித்த இளைஞர்க்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், தமிழ்நாடு அரசு பழைய முறைகளை எல்லாம் அகற்றி புதுமையான முறையில் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது எனவும்,
அதன் தொடர்ச்சியாக புதிய தொழில் நுட்பங்களுடன் இளைஞர்கள் திறன் பயிற்சி பெறுகின்ற வகையில் தமிழ்நாட்டில் இருக்கின்ற தொழில் பயிற்சி நிலையங்களுக்கு ரூ. 2870 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் இருக்கின்ற 112 தொழில்பயிற்சி நிலையங்களில் தற்போது மட்டும் 71 தொழில்பயிற்சி நிலையங்களுக்கு சுமார் ரூ. 34.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றது எனத் தெரிவித்தார்.
மேலும், ரூ. 31 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப மையம் கட்ட திட்டம்வகுக்கப்பட்டுள்ளது எனவும், தற்போது அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் புதிய நிறுவனங்கள் வரும் போது அதில் பணியாற்ற கூடிய வகையில் பயிற்சி வழங்கப்படுகின்றது என கூறினார்
மேலும் இவ்வாய்வின் போது அமைச்சருடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




















