திருவாரூர், மே. 06 –
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட அரியலூர் வடிகால் வாய்க்கால் கீழத்தெரு வழியாக சென்று முல்லை ஆற்றில் முடிகிறது.
இந்நிலையில் இவ்வடிகால் வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், அவ்வாய்க்காலில் கிடக்கும் கழிவுப்பொருட்களால் அவ்வாய்காலில் வரும் நீர் வழிந்தோடாமல் அப்பகுதியில் தேங்கி நிற்கிறது. மேலும் இவ்வாய்க்கால் திருத்துறைப்பூண்டி நகர் பகுதி வழியாக செல்கிறது.
திருத்துறைப்பூண்டி நாகை சாலை அருகில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான உணவகத்தின் கழிவு பொருட்கள் மற்றும் கழிவு நீர் அவ்வாய்க்காலில் அதிக அளவு கலப்பதால் அப்பகுதியில் கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்திப் பெருகி வருகிறதெனவும், அதனால் அப்பகுதியில் உள்ள கீழத்தெருவில் வசித்திடும் தாங்கள் அக்கொசுக் கடியினால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகிறோம் என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதனால் அப்பகுதியில் உள்ள வடிகால் கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்து தருமாறு அப்பகுதியில் வசிக்கும் கீழத்தெரு பொதுமக்கள் திருத்துறைப் பூண்டி நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்புகார் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் துறைச் சார்ந்த அரசு நிர்வாகம் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டு, கழிவு நீரை அகற்றி வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு தினந்தோறும் தாங்கள் அவதிப்படும் கொசுக் கடித் தொல்லையில் இருந்து விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.




















