திருவாரூர், மார்ச். 19 –
மருத்துவமனையைத் தேடி மக்கள் போகாமல் மக்களைத் தேடி மருத்துவ வசதிகள் சென்றடைவதற்காக ”மக்களை தேடி மருத்துவம்” என்ற அற்புதமான திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இது மக்களின் இல்லங்களுக்கு சென்று ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் வழங்கும் ஒரு உன்னதமான திட்டமாக செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது.
மேலும் இத்திட்டத்தின்பகுதியாக இன்று திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 21 வது வார்டில் மக்களை தேடி மருத்துவ முகாம் திமுகவின் மாநில விவசாய தொழிலாளரணி துணைச்செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான இரா. சங்கர் தலைமையில் நடைபெற்றது.
மேலும், இம்முகாமினை, நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் துவக்கி வைத்தார். தொடர்ந்து கொடிக்கால்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் பொது மக்களுக்கு பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டனர். மேலும், இம்முகாமில் 250 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.