குடவாசல், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே விஷ்ணுபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய் விலகும் என்பது ஐதீகமாகும் மேலும் அச் சிறப்பு மிக்க கோவிலின் அருகே மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இவ்வாலயத்தில் வைகாசி பெருந் திருவிழா ஆண்டுதோறும் இரு கோவில்களிலும் சேர்த்து ஒன்றாக நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் இவ்வருட தீமிதி திருவிழாவினை முன்னிட்டு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உற்சவம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மகா மாரியம்மன் மகா காளியம்மன் காத்தவராயன் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா காட்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் சாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். சாமிக்கு முன்னதாக கோலாட்டம் கரகாட்டம் கேரள செண்டை மேளத்துடன் நடனமாடியபடி கலைஞர்கள் ஊர்வலமாக வந்தனர்.
மேலும் தீ மிதி திருவிழாவிற்காக கோவிலின் எதிரே தீ குண்டம் மூட்டப்பட்டு அதில் முதலாவதாக ஆலய பூசாரி இறங்கியவுடன் தொடர்ந்து காத்தவராயன் சாமியை தூக்கிக்கொண்டு பக்தர்கள் தீ மிதித்தனர். பின்பு ஒன்றன் பின் ஒன்றாக பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த திருவிழாவை காண்பதற்காக விஷ்ணுபுரம் கிராம மக்கள் மட்டுமல்லாது திருவாரூர் மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அதேபோல தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.






















