திருவாரூர், மார்ச். 03 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், வேம்பனூர் கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பையனார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதியன்று விக்னேஸ்வர பூஜையுடன் இவ்விழா துவங்கி தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு மூன்றாம் கால யாக பூஜையில் மஹாபூர்ணாஹுதி நடைபெற்றது. மேலும், தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாக பூஜையில் மகாபூர்ணாஹூதியுடன் மகா தீபாராதனை நடைபெற்று மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து சரியாக 9 மணி அளவில் விமான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ வேம்பையனாருக்கு புனித நிர் ஊற்றி மகா அபிஷேகம் நடைபெற்றது. மேலும், அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், சுரேஷ் மூப்பனார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாப்பா சுப்பிரமணியன், ரங்கராஜன், ஆசைமணி, சிட்டி யூனியன் வங்கி பாலசுப்பிரமணியன், மற்றும் ஆன்மீகமானந்தம் அமைப்பு கனகராஜ் மணக்கால் இராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன் குடும்பத்தார் மற்றும் கிராம பொதுமக்கள் ஆலய மருளாளிகள் ஆகியோர் மிகச்சிறப்பாக செய்து கொடுத்திருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருசுவையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.