கும்பகோணம், ஜன. 20 –
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 நபர்களை திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு கைது செய்தது.
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில், பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் காவல்துறை ஆய்வாளர்கள் ராஜேஷ் நாகலட்சுமி உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் மற்றும் காவல் துறையினர் திருவிடைமருதூர் மெயின் ரோடு ஐந்து தலைப்பு வாய்க்கால் அருகில் உள்ள மசாஜ் சென்டர் சோதனை செய்தனர்.
அச்சோதனையில் வாடகைக்கு இடம் பிடித்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் அவர்கள் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. மேலும் அச்சோதனையின் போது, மசாஜ் சென்டரில் இருந்த தரகர் தாமஸ் என்பவரைப் பிடித்து விசாரணை செய்ததில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், அதுப்போன்று கும்பகோணம் பெரிய பள்ளிவாசல் அருகில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்ததில், அங்குள்ள தரகர் மணிகண்டன் மற்றும் 2 பெண் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து மேற்கு காவல்நிலையத்தில் அவர்கள் மூன்று பேரிலும் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவ்வழக்குத் தொடர்பாக மேலும் மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருவதாக காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.


























