காஞ்சிபுரம், டிச. 30 –
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரனேரி உள்ளது. இவ் ஏரி பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இந்த ஏரியானது நிரம்பி முழு கொள்ளளவை எட்டினால் அப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.எனக் கூறப்படுகிறது.
ஆனால் தற்சமயம் ஏரியின் ஒரு பகுதியில் உள்ள கரை சில ஆண்டுகளாக வலுவிழந்து காணப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் ஏரி தண்ணீரை நம்பியிருந்த விவசாயிகள் அப்பகுதியில் பயிரிட்டிருந்தனர். ஆனால் வலுவிழந்த கரைப்பகுதியிலிருந்து, திடீரென உடைப்பு ஏற்பட்டு ஏரி நீர் வெளியேற துவங்கியது. இத்தகவல் பொதுப் பணித்துறை அலுவலர்களுக்கு தெரிய வர, சம்மந்தபட்ட இடத்திற்கு விரைந்து மணல் மூட்டைகள் கட்டியும் ஜேசிபி இயந்திரம் மூலமும் ஏரி உடைப்பை அடைக்கும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

























