கும்பகோணம், செப். 27 –
கும்பகோணத்தில் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ் டி பி ஐ இயக்கங்களை அரசு தடை செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், மேலும் பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் வீடுகளிலும், அவர்களது உடமைகள் மீதும் பெட்ரோல் குண்டு வீச்சு நடைப்பெற்றதற்கு கண்டனம் தெரிவித்தும், சிவசேனா கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சி அனுமான் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை விரைந்து தமிழக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற முழக்கங்களை எழுப்பி அவர்கள் காந்தி பூங்கா எதிரே அரசின் தடையை மீறி சிவசேனா கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் வேல்முருகன், குட்டி, சிவகுமார், ஆனந்த், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் பாலாஜி மற்றும் மனோகரன் தலைமையிலான காவல்துறையினர் ஆர்ப்பாட்டக் காரர்களை கைது செய்தனர்.