பொன்னேரி, செப். 06 –
பொன்னேரி அருகே உள்ள மாதவரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீஇளங்காளியம்மன் திருக்கோவில். இத் திருக்கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இக்கும்பிஷேக விழாவிற்கான பணிகள் கடந்த வெள்ளியன்று யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. மேலும், ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபராதனை காட்டப்பட்டு வழிப்பாடுகள் நடைப்பெற்றது.
அதன் நிறைவு நாளான இன்று கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு நதிகளிலிருந்து கும்பங்களில் கொண்டு வரப்பட்ட புனிதநீர் சிவாச்சாரியர்களால் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் இவ்விழாவினை காண வந்திருந்த பக்தர்கள் மீது கும்பாபிஷேக கலச நீர் தெளிக்கப்பட்டது. அப்போது அவர்கள் பரவசத்தில் ஓம் சக்தி பராசக்தி என வின் முட்டும் அளவிற்கு குரலெழுப்பினார்கள். அது அங்கு உள்ளவர்கள் அனைவரிடத்திலும் பக்தி பரவசத்தை பெருக்கடுக்க வைத்தது எனலாம்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தீபராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பொன்னேரி சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை புரிந்து சாமி மற்றும் கோபுர தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். மேலும், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒட்டுமொத்த கிராம இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.






















