கும்பகோணம், செப். 01 –
கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு நகர பகுதியின் பல்வேறு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைப்பெற்றது.
மேலும் வீடுகளில் சிறிய வகையான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து பொதுமக்கள் பூஜை செய்து வழிப்பட்டனர். இந்நிலையில் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள யானை மங்களத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் கஜபூஜை நடைபெற்றது. சிவவாத்தியங்களுடன் யானையை கோவிலுக்கு அழைத்து வந்தனர். யானைக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து ஆப்பிள் கொய்யா மாம்பழம் வாழைப்பழம் பஞ்சாமிர்தம் ஆகியவைகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.
தொடர்ந்து நேற்று காலை முதல் பக்தர்கள் யானைக்கு பழங்கள், சர்க்கரை, வழங்கியும் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர்கள். பக்தர்களுக்கு யானை மங்களம் துதிக்கையால் ஆசி வழங்கியது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் யானை மங்களத்திற்கு மலர்தூவி வழிபாடு நடத்தினர். பின்னர் வீடுகள் தோறும் யானையை வரவேற்று ஆராத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.