திருவாரூர், ஆக. 25 –
திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழைநீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து உள்ளார்கள்.
இம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நன்னிலம் மற்றும் குடவாசல் தாலுகா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு மேலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
அதிலும் குறிப்பாக நன்னிலம் அருகே உள்ள அதம்பார், நெம்மேலி, ஜெகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட ஊர்களில் வெள்ளம் ஏற்பட்டாலும், அம்மழைநீர் வடியக்கூடிய வடிகாலான சின்ன ஓடை கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாத காரணத்தினால், ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வடிகால் ஆகாயத்தாமரை மண்டி கிடக்கிறது.
இதன் காரணமாக வயலும் வாய்க்காலும் ஒரே மட்டத்தில் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. மேலும் அடுத்த சில தினங்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளார்கள்.
திருமலை ராஜன் ஆற்றில் கலக்கும் இந்த வடிகால் தூர்வாரப்படாமல் இருப்பதால்தான் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், இந்த வடிகாலை போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.
பேட்டி: முத்துக்குமார்
(விவசாயி)
ஜெகநாதபுரம்.