திருவாரூர். ஆக. 18 –
திருவாரூர் நகரின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இம் மழையின் காரணமாக தஞ்சை சாலையில் உள்ள விளமல் கடைவீதியில் மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்ததால், தஞ்சாவூர் திருவாரூர் நெடுஞ்சாலையில் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு உடனடியாக வந்த மின்நிலைய ஊழியர்கள் சரி செய்ததைத் தொடர்ந்து போக்குவரத்து சீர் நிலைக்கு வந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக ஒருவாரமாக கொளுத்திய வெய்யிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் குளிர்ச்சியான சூழல் தற்போது நகர் முழுவதும் நிலவி வருகிறது.




















