கும்பகோணம், ஆக. 14 –
நாளை இந்திய சுதந்திர தினமான ஆக 15 ல் கும்பகோணத்தில், சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய போர்ட்டர் டவுன் ஹாலில் 7 அடி உயர சுவாமி விவேகானந்தரின் முழுவுருவ வெங்கல சிலைத்திறப்பு விழா நடைப்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு இன்று 125 பள்ளி மாணவ, மாணவிகள் சுவாமி விவேகானந்தரை போல் வேடமிட்டு ஊர்வலமாக கும்பகோணத்தின் முக்கிய வீதிகளில் சென்றனர்.
சுவாமி விவேகானந்தர் கடந்த 1897 ஆம் ஆண்டு கும்பகோணத்திற்கு வருகைப் புரிந்து பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுச்சிமிகு உரை நிகழ்த்தினார். அதன் நினைவாக 125 ஆண்டுகளுக்கு பின்பு அவர் உரை நிகழ்த்திய இடத்தில் அவருக்கு சுமார் 7 அடி உயரத்தில் முழுவுருவ வெங்கல சிலை அமைக்கப்படுகிறது.
அதற்கான ஏற்பாட்டினை போர்ட்டர் டவுன்ஹால் மற்றும் தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ண மடம், இணைந்து செய்து வந்தனர். அப்பணி நிறைவுப்பெற்ற நிலையில் அதற்கான சிலைத்திறப்பு விழா நாளை ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தினத்தில் நடைப்பெறுகிறது.
அவ்விழாவினை போற்றும் வகையில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைப்பெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 2 ஆம் நாளான இன்று சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 125 மாணவ, மாணவியர்கள் சுவாமி விவேகானந்தர் போல் வேடமணிந்து முக்கிய வீதி வழியாக சுற்றி வந்த ஊர்வலம் போர்ட்டர் டவுன்ஹாலில் நிறைவடைந்தது.
அதனைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தா திருவுருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சுவாமி விமூர்த்தா னந்தர், மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார், ஒன்றிய துணைத் தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும், தருமை ஆதீனம் 27 வது குரு மகாசன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தேசியக்கொடி ஏற்றி ஆசியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாமன்ற மண்டல குழு தலைவர்கள், அனைத்து மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பை சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் ஏராள மாணவர்கள் கலந்து கொண்டனர்.