பொன்னேரி, ஆக. 11 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக மேலும் விரைவு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது பிணையில் வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் அவர்களது சொத்தை பறிமுதல் செய்யவும் அறிவுறுத்தினார். மேலும் பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் ஆகஸ்ட் 11 ஆம் தேதியான இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்று நிகழ்ச்சி நடத்தும் படி உத்தரவிடப்பட்டது.
அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு எதிராக மாணவர்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், நகர மன்ற தலைவர் பரிமளம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுடன் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதி மொழியினை ஏற்றனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.