கும்பகோணம், ஆக. 02 –
தேர்தலில் கள்ள ஓட்டு போட முடியாது என்பதால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பிற்கு திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள அத்திட்டத்திற்கு அக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக இந்துமக்கள் கட்சி மாநிலத்தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டினார். தொடர்ந்து மாநிலம் முழுவதும் 30 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுவரை கல்வி உபகரணங்கள் வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவதாகவும் அதற்கு அவர் தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும் உடனடியாக அவற்றை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் இன்று கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து, தனது வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பதற்காக உரிய விண்ணப்ப படிவங்களுடன் தனது கட்சி நிர்வாகிகளுடன் திரண்டு வந்து கோட்டாட்சியர் லதாவிடம் அளித்தார். பின்னர் கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தேர்தலில் கள்ள ஓட்டு போட முடியாது என்பதால், வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைக்க காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் நிலையில், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மாநிலம் முழுவதும் 30 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலனிகள் போன்ற கல்வி உபகரணங்கள் வழங்காமல் காலம் தாழ்த்துவதாகவும், அதற்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாக தெரிவித்தார். மேலும், உடனடியாக அவற்றை வழங்க போர்க்கால அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்து மக்களிடையே அவதூறு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர் என்றும், அவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு நிதியமைச்சர் பதிலளிக்க முன் வருகையில் பதிலளிக்க முடியாத வகையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலி கூத்தாக்குகிறார்கள் என, குற்றம் சாட்டினார்.
இப்போக்கு தமிழக நலனுக்கு எதிரானது, இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக முதல்வரின் செயல்பாடு வெகு சிறப்பாக அமைந்திருந்தது. இது, நல்ல மாற்றம், மத்திய அரசுடன், மாநில அரசு நல்லிணக்கத்துடன் செயல்படுவது தான், தமிழக வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நன்மை பயக்கும் என்றார். இதனை அரசியலுடன் இணைத்து முடிச்சு போடக்கூடாது என்றும், அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். இப் பேட்டியின் போது அவருடன் மாநில செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.




















