கும்பகோணம், மே. 18 –  

கும்பகோணம் அருகேவுள்ள தாராசுரம் காமாட்சியம்மன் கோயில் இடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாடகைக்கு பல ஆண்டு காலமாக குடியிருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகஅரசு, இவர்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்ய ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுவை நியமனம் செய்துள்ளது.  ஆனால் அதற்கு முன்பாகவே, அறநிலையத்துறை தன்னிச்சையாக தாறுமாறாக வாடகையை உயர்த்தி, பல லட்சங்கள் வாடகை நிலுவைத் தொகை இருப்பதாக தெரிவித்து, வீட்டின் மின் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிப்போம் என மறைமுகமாக இப் பெருந்தொகையை கட்ட மிரட்டி வருவதாக குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், தாறுமாறாக உயர்த்திய வாடகை நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்திடவும், காலதாமதமின்றி வாரிசு மாற்றம் செய்து தர கோரியும், அரசாணை 318ன் படி ஏழை எளிய மக்களுக்கு நிலப்பட்டா வழங்கிட கோரியும் தாராசுரம் கடைவீதியில், காமாட்சியம்மன் திருக்கோயில் இடங்களில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் எஸ். வீரமணி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் சா.ஜீவபாரதி, மாநகராட்சி உறுப்பினர் ஆ செல்வம், உள்ளிட்ட திரளான பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here