சென்னை, மே. 07 –
இறுதிச்சடங்கில் நடந்த இரு தரப்பினரிடையே நடந்த கோஷ்டி மோதலில் ஒருவரை ஒருவர் பட்டாக்கத்தியால் வெட்டிக் கொண்ட சம்பவத்தால் வேளச்சேரி பகுதியில் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ஐந்து பேர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை, வேளச்சேரியை சேர்ந்தவர் கலையரசன். இவர் சரித்திரபதிவேடு குற்றவாளி ஆவார். இவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார், மணிகண்டன் ஆகிய இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் மணியின் ஆதரவாளர் கோபி என்பவருக்கு பல் உடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மணிகண்டன் (33), தனது நண்பர்களான கோபி (31), மற்றொரு மதுரை மணிகண்டன், சுரேஷ் (38), நேதாஜி (31), ஆகியோருடன் சேர்ந்து வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்களான வெங்கடாபுரம் சுதாகர், பாலாஜி, ராஜா ஆகியோரோடு சமாதான பேச முயன்ற போது அது தோல்வியில் முடிந்ததுள்ளது.
இந்நிலையில், மீண்டும் இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, இதனால் வேளச்சேரி 100 அடி சாலையில் பட்டாக்கத்தியால் மாறி மாறி தாக்கிக் கொண்டதில், சுதாகர், ராஜா, பாலாஜி, மணிகண்டன் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக, வினோத்குமார் கொடுத்த புகாரின் படி, வேளச்சேரி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய, மணிகண்டன், நேதாஜி, சுரேஷ், கோபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேப் போல, மணிகண்டன் கொடுத்த பகாரின்படி, வினோக்குமார் (28), கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இருதரப்பில் கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



















