நன்னிலம், மே. 06 –
நன்னிலத்தில் தங்கை முறை உள்ள இளம் பெண்ணின் குளியல் காட்சியை ஆபாசமாக படம் பிடித்து, தன்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் சமூக வலைதளத்தில் வீடியோவைப் பதிவிடுவேன் என மிரட்டிய அண்ணன் முறை இளைஞரை போலீஸார் தேடி வந்த நிலையில் இன்று அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளார். உடன் அவருக்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி இவருடைய தூரத்து சொந்தமான மோகன்ராஜ் சிறுமிக்கு அண்ணன் முறை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி குளிக்கும் போது அவரை ஆபாசமாக படம் எடுத்து சிறுமியிடம் படத்தை காட்டி சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்றும் மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென மிரட்டியுள்ளார்.
மேலும் கடந்த வாரம் மோகன்ராஜ் மற்றும் அவரது தந்தை தாயார் மற்றும் அவரது தம்பி ஆகியோர் சேர்ந்து சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுக் குறித்து மனமுடைந்த சிறுமி அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இந்நிலையில் மயங்கிய நிலையில் சிறுமியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர் சிகிச்சையின் பலனாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலம்பெற்று வீடு திரும்பிவுள்ளார்..
இதுக் குறித்து சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் மோகன்ராஜ் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும் மற்றும் அவரது தந்தை தனிக்கொடி தாயார் சாந்தி தம்பி பாக்கியராஜ் ஆகியோர் மீது சிறுமி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தும் அனைவரையும் கடந்த வாரம் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த மோகன்ராஜை இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

















