கும்பகோணம், மே. 03 –
கும்பகோணம் அருகேவுள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் அக்ஷய திருதியை முன்னிட்டு, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பங்கேற்று புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட கொடிக்கம்பம் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் இன்று அட்சய திருதியை பெருவிழா கொண்டாடப்பட்டது. ரோகிணி நட்சத்திரம் விருச்சிக ராசிக்கு உரிய பரிகாரத் தலமாக இக்கோயில் இறைவி விளையாட்டாக சிவபெருமானின் திருவிழிகளை மறைத்தமையால் சாபம் ஏற்பட்டு கிளி ரூபமாகி அந்நிலை நீங்க அம்மை தை மாத மகர சங்கராந்தி காவிரியில் நீராடி சுயரூபம் அடைந்து சிவபெருமானை பூஜித்து தனது சாபத்தை நிவர்த்தி செய்து கொண்டதாக ஐதீகம்.
1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குருவர்களால் பாடல் பெற்ற தலமாகும். பழமை வாய்ந்த இக்கோயிலில் அக்ஷய திருதியை விழாவை முன்னிட்டு நட்சத்ரா குழுமத் தலைவரும், மத்திய பட்ஜெட் தயாரிப்பு குழு உறுப்பினருமான பொருளாதார நிபுணர் குரு.சம்பத்குமார் ஏற்பாட்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கொடிமரம் நிர்மாணம் செய்யப்பட்டு அதன் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். விழாவில் தருமபுரம் ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் திருஞானசம்பந்தர் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.



















