சென்னை, ஏப். 16 –

இன்று, ( 16-04-2022 ) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், ஓராண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்பு பெற்று பயனடைந்த விவசாய பெருமக்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் 2021-2022-ஆம் ஆண்டில் 1,00,000 வேளாண் மின் இணைப்புகள் வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தோம்.. நானே தொடங்கி வைத்தேன். அன்றைய நாளே, பயனாளிகள் பத்து பேருக்கு வேளாண் மின் இணைப்புக்கான ஆணையை நான் வழங்கினேன். அன்று அடையாளமாகப் பத்து பேருக்கு வழங்கினேன்; இன்று ஒரு லட்சம் பேர் பயன் பெற்றுவிட்டார்கள். என்றார்.

முன்னதாக முதலமைச்சர் உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு சாதாரண மகிழ்ச்சி அல்ல, ஒரு மிகப் பெரிய மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், நமது அரசு என்ன சாதனை செய்திருக்கிறது என்பதை முதலமைச்சராக இருக்கக்கூடிய  நான் சொல்வதை விட,  மின்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய திரு. செந்தில்பாலாஜி அவர்கள் சொல்வதைவிட, இதனால் பயன்பெற்று இருக்கக்கூடிய நீங்கள் அதைப்பற்றி சொல்வதைக் கேட்கும் போதுதான் நான் அதிகமான அளவில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

மேலும் ஏதோ ஒரு திட்டத்தை அறிவித்தோம், அப்படி அறிவித்த திட்டத்தால் சிலர் பயனடைந்து இருப்பார்கள் என்று நானோ நமது அரசோ இருப்பது இல்லை. அறிவிக்கிற திட்டத்தால் எத்தனை லட்சம் பேர் பயனடைந்தார்கள், நாம் அறிவிக்கிற திட்டத்தின் உண்மையான பலனை அனைவரும் அடைந்தார்களா என்பதைக் கவனிப்பதில் நான் எப்போதும்  கண்ணும் கருத்துமாக இருப்பவன் என்றுக்குறிப்பிட்டார். அதுப்போன்றே அமைச்சர்களும், அதிகாரிகளும் இருக்க வேண்டும் என்றும் நினைப்பவன் தாமென தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் புதிய மின் இணைப்பைப் பெற்ற வேளாண் பெருங்குடி மக்களாகிய நீங்கள் இத்திட்டத்தால் எந்த வகையில், எந்தெந்த அடிப்படையில் பயனடைந்திருக்கிறோம் என்று சொல்வதைக் கேட்கும் போது, அதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டுப் பத்திரம் என்றார்.

இத்திட்டம் கடந்த 23.09.2021 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நான் தொடங்கி வைத்தேன். ஓராண்டு காலம் முடிவதற்கு முன்னால் ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் இணைப்பு என்கிற காரணத்தினால், 1 லட்சம் குடும்பம் அடையும் பயன் மட்டுமல்ல, அவர்களது வேளாண் உற்பத்தியால் இந்த மாநிலம் அடைய இருக்கக்கூடிய வளர்ச்சி என்ன என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே இந்தச் சாதனையையும் நாம் அளவிட முடியாத சாதனை என்றுதான் சொல்ல வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர் நினைவுப்படுத்திக் கூறுகையில் 1990 வரை உழவர்கள், வேளாண்மைக்காக பயன்படுத்தும் மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்தி வந்தார்கள். இப்போது இருக்கக்கூடிய புதியவர்களுக்கு இதுபற்றி தெரியாமல் இருக்கலாம் என்பதால் அதனை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். 12,09,543 வேளாண் மின் இணைப்புகள் அப்போது இருந்தது.

ஒவ்வொரு உழவரிடமிருந்து 10 குதிரைத் திறன்வரை உள்ள மின் மோட்டார்களுக்கு குதிரைத்திறன் ஒன்றிற்கு 50 ரூபாய் வீதமும், 10 குதிரைத் திறனுக்கு மேல் உள்ள மின் மோட்டார்களுக்கு ஒரு குதிரைத் திறனுக்கு 75 ரூபாய் வீதமும் ஆண்டுதோறும் கணக்கிட்டு வசூலிக்கப்பட்டு வந்தது.

தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தியினை பெருக்கி, உழவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் கடந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு 19.11.1990 அன்று  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்,  அனைத்து உழவர்களுக்கும் இலவச மின்சாரம் என்ற ஒரு உன்னதமான அறிவிப்பை அறிவித்தார்கள்.

அதன்படி, 2001 முதல் 2006 வரை நடந்த ஆட்சியில் 1,62,479 வேளாண் மின் இணைப்புகளும், அதனைத்தொடர்ந்து 2006 முதல் 2011 வரை நடைபெற்ற கழக ஆட்சியில் 2,09,910 வேளாண் மின் இணைப்புகளும் வழங்கப்பட்டன.  அதிலும், குறிப்பாக  2010-2011 காலகட்டத்தில் கழக ஆட்சியில் அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 77,158 வேளாண் மின் இணைப்புகள் உழவர்களுக்கு வழங்கப்பட்டன என்றுக் குறிப்பிட்டார்.

அதன்பின் நடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதாவது 2011 முதல் 2021 வரை உழவர்களுக்கு வழங்கப்பட்ட வேளாண் மின் இணைப்புகள் 2,21,579 மட்டுமே. அதாவது ஆண்டுக்குச் சராசரியாக 22,100 மின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டன என அதிமுகவின் ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் உள்ள செயல்பாட்டை ஒப்பீட்டை சுட்டிக்காட்டினார். மேலும், புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் இணைப்புகள் வழங்கவில்லை என்றார்.

31.03.2021 நிலவரப்படி, பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 4,52,777  வேளாண் விண்ணப்பங்கள் பதிவுசெய்து நிலுவையில் இருந்தன. இந்த குறையை தீர்க்கும் வண்ணம், உழவர்களின் நலனை எப்போதுமே முதன்மையாக கருதக்கூடிய நாம், 2021-2022-ஆம் ஆண்டில் 1,00,000 வேளாண் மின் இணைப்புகள் வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தோம்.

நானே தொடங்கி வைத்தேன். அன்றைய நாளே, பயனாளிகள் பத்து பேருக்கு வேளாண் மின் இணைப்புக்கான ஆணையை நான் வழங்கினேன். அன்று அடையாளமாகப் பத்து பேருக்கு வழங்கினேன்; இன்று ஒரு இலட்சமாவது இலவச மின் இணைப்புக்கான உத்தரவை நான் வழங்குகிறேன்.

இதனையும் சேர்த்து தமிழ்நாட்டில் வேளாண் தொழில் செய்வோரின் எண்ணிக்கை 21.80 இலட்சத்திலிருந்து 22.80 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. வழங்கப்பட்ட ஒரு இலட்சம் வேளாண் மின் இணைப்புகளினால் தமிழ்நாட்டின் வேளாண் நிலப்பரப்பு 2,13,107 ஏக்கர் அதிகரித்திருக்கிறது.

சுமார் 6,30,340 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்கள் மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தியதற்கு 803 கோடி ரூபாய் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மக்களின் நலன் ஒன்றை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்படும் இந்த அரசு, இதுவரை இல்லாத வரலாற்று சாதனையாக ஓராண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்புகளை வழங்கி ஒரு பெரிய சாதனையை படைத்திருக்கிறது. இன்று ஒரு லட்சம் பேர் பெற்றுவிட்டார்கள் என உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியினுடைய சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி, எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும்  பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, அரசுத்துறை உயர் அலுவலர்கள் மேலும், விவசாய சங்கத்தைச் சார்ந்திருக்கக்கூடிய பல்வேறு பிரிவுகளைச் சார்ந்தவர்கள், பத்திரிகை, ஊடகத்துறையினர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here