சென்னை, ஏப். 05 –
தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 விருதினை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி இரா.சேத்தனாவிற்கு இன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் அலுவலர்கள் காலனி பிரதான சாலை பகுதியில் வசிக்கும் மருத்துவர் வி.ராஜ்குமார் என்பவரின் மகளான இரா.சேத்தனா முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் முதுநிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகிறார். மேலும் இவர் இளம் எழுத்தாளர் அது மட்டுமில்லாது நடனம், மற்றும் தற்காப்புக் கலையான சிலம்பம் போன்றவற்றிலும் திறன் பெற்று விளங்குபவர்.
இந்நிலையில் சமீபத்தில் வடகிழக்கு நகரத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் எனது இம்பால் பயணம் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் இவர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு, அதன் விற்பனை மூலம் வருவாய் ஈட்டிய தொகையான ரூ. 45 ஆயிரத்தை தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவராண நிதிக்கு வழங்கியுள்ளார். முன்னதாக இவர் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பக இல்லங்களிலும் தன்னார்வத்துடன் தொண்டு செய்வது மட்டுமல்லாது, நிதியுதவியும் அவ்வப்போது செய்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து வாய்புற்று நோய் விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்ததுடன் குழந்தைகள் மீதான பாலியல் வன்செயல்களுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வருகிறார். உடல் மற்றும் மனரீதியான வன்கொடுமைகளிலிருந்து தற்காக்கும் கலையை பள்ளிக்குழந்தைகள் கற்பிக்கும் தூதுவராக வேண்டும் என்பதே தனது எதிர்கால நோக்கமாக வைத்து செயல்பட்டு வருகிறார்.
இவரின் இச்செயல்களை பாராட்டும் விதமாகவும், மேலும் இவரின் செயல்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் தமிழ்நாடு அரசு குழந்தைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்காக இவரது தொடர்ச்சியான பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதத்திலும், இவர் பிற பெண் குழந்தைகளுக்கு முன்மாதியாக திகழ்வதாலும், தேசிய பெண் குழந்தைத்தினத்தை முன்னிட்டு இவருக்கு பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 என்ற விருது, ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுப்பத்திரங்களை வழங்கி பள்ளி மாணவி இரா. சேத்தனாவை கௌரவித்துள்ளது.