கும்பகோணம், மார்ச். 30 –
கும்பகோணத்தில் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர் அரண் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), 167 ஆண்டுகள் தொன்மையான இக்கல்லூரியில் மொத்தம் 17 துறைகள் உள்ளது. இவற்றில் 12 துறைகளில் ஆய்வுத்துறைகளும் உள்ளது என்பது பெருமைக்குரியது,
இக்கல்லூரியில் வெள்ளி நாக்கு சீனிவாச சாஸ்திரி, கணிதமேதை ராமானுஜன், தமிழ்தாத்தா உவேச, தென்கச்சி கோ சுவாமிநாதன், இந்து கஸ்தூரிரங்கன், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் முன்னாள் இந்நாள் மத்திய மாநில அமைச்சர் பெருமக்கள் என பலர் கல்வி பயின்று இப்பள்ளிக்கு பெருமைச்சேர்த்துள்ளனர். மேலும், இக்கல்லூரியில், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து 5000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்கல்லூரியில் 2000 பேர் படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு ஒரே ஒரு கழிப்பறையும், மாணவர்களுக்கும் ஒரே ஒரு கழிப்பறை தான் உள்ளது. இந்நிலையில் அக்கழிப்பறையும் சுகாதாரம் இல்லாமல் மாணவிகள் கழிப்பறை செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். இது சம்பந்தமாக பல முறை அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் கூடுதல் கழிப்பறை குடிதண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக தாங்கள் போராடி வருவதாக கூறுகின்றனர்.
இதுவரை தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றித் தராததால் கல்லுாரி, மாவட்ட உயர்கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் அலட்சியப்போக்கை கண்டிக்கும் வகையில், இன்று மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் இதுக்குறித்து மக்கள் தெரிவிக்கையில் பல்வேறு தலைவர்கள் மற்றும் மேதைகள் படித்து பெருமைச் சேர்த்த இக்கல்லூரியில் அடிப்படை வசதி இல்லை என்பது மிக வேதனையை தங்களுக்கு அளிப்பதாக கூறுகின்றனர்.