திருவண்ணாமலை, பிப். 27-
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான கிராம ஊராட்சிகளை கொண்ட திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை ஜவ்வாதுமலை தண்டராம்பட்டு செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து குக்கிராமங்களிலும் செல்போன் சேவை மற்றும் இணையதள சேவையை மேம்படுத்த வேண்டுமென சி.என்.அண்ணாதுரை எம்பி நாடாளுமன்றத்தில் ஏற்கனவே வலியுறுத்தினார். மேலும் தொலை தொடர்புதுறை உயரதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார். அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்து தொலை தொடர்பு வசதிகளை மேம்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தை பி.எஸ்.என்.எல். சார்பில் 54 டவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் 67 டவர்கள் உள்பட 121 அதிக திறனுள்ள புதிய டவர்கள் அமைக்கவும் பி.எஸ்.என்.எல். சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 82 டவர்களின் சேவையை 3ஜி மற்றும் 4ஜி சேவையான தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்போன் சிக்னல் திறன் இணைதளவசதி ஆகியவை பண்மடங்கு மேம்படுத்தும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது குறிப்பாக மலைகிராமங்களில் தடையில்லா வசதிகள் உருவாகும். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய செல்போன் டவர்கள் அமைத்தல் மற்றும் பிஎஸ்என்எல் செல்போன் டவர்களின் திறனை மேம்படுத்துதல் பணிகள் குறித்து தொலை தொடர்பு துறை துணை தலைமை இயக்குநர் எஸ்.கே.ராதா இயக்குநர் எஸ்.ராஜசேகரன் பிஎஸ்என்எல் உதவி பொதுமேலாளர் டி.ரமேஷ்குமார் கோட்ட பொறியாளர் பாபு ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரையை சந்தித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தொலைதொடர்பு துறை மேம்பாட்டு பணிகளை விளக்கினர். அப்போது இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
மாவட்டத்தில் தொலைதொடர்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் எ.வ.வேலு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோரது வழிகட்டுதலின் பேரில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதன் பேரில் தற்போது புதிய செல்போன் டவர்கள் மற்றும் பழைய டவர்களின் திறன் மேம்படுத்துதல் பணிகள் தொடங்கியிருக்கிறது. திருப்பத்தூர் பகுதிகளிலும் 20 புதிய செல்போன் டவர்கள் அமையவுள்ளதாக சி.என்.அண்ணாதுரை எம்பி, தெரிவித்துள்ளார்.




















