திருவண்ணாமலை, ஜன. 24 –
2021ஆம் ஆண்டு ரவி பருவ இதர பயிர்களில் திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்துதல் – இ-அடங்களில் பதிவு செய்துள்ளதை உறுதி செய்த பின்னரே இழப்பீடு வழங்கப்படும்
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், தமிழ்நாட்டில் பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டம் காரீப் 2016 முதல் சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் நமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்-3 (நவரை), கரும்பு, கம்பு, எள், மரவள்ளி, மிளகாய் மற்றும் வாழை பயிருக்கு அறிவிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
எனவே நெல்-3 (நவரை), கரும்பு, கம்பு, எள், மரவள்ளி, மிளகாய் மற்றும் வாழை பயிர்களை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனை இ- அடங்களில் பதிவு செய்து அதனுடன் வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர்கள் ஒரு ஏக்கருக்கு நெல்-3 (நவரை) ரூ.458.25-ம், கரும்பு ரூ.2600-ம்,கம்பு ரூ.163.87-ம்,எள் ரூ.148.87-ம், மரவள்ளி ரூ.28.15-ம், மிளகாய் ரூ.1118.70-ம் மற்றும் வாழை ரூ.1018.70-ம் காப்பீட்டுத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் நெல்-3 (நவரை), மிளகாய் மற்றும் கம்பு பயிருக்கு 31.01.2022, மரவள்ளி மற்றும் வாழை பயிருக்கு 28.02.2022, எள்ளிற்கு 15.03.2022, கரும்பு பயிருக்கு 31.08.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் சேதமான பரப்பு இ-அடங்களில் பதிவு செய்துள்ளதை உறுதி செய்த பின்னரே இழப்பீடு வழங்க அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் காப்பீடு செய்யும் பயிருக்கு இ-அடங்களில் பதிவு செய்வதை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே காப்பீடு செய்வதற்கான காலக்கெடு முடிவதற்குள் விவசாயிகள் இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்ப்டும் மகசூல் இழப்புகளிலிருந்து பாதுகாத்திட கடைசி நாள் வரை காத்திராமல் முன்னரே காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்
எனவே விவசாயிகள் இயற்கை நிகழ்வுகள் ஏற்படும் முன் இத்திட்டத்தில் தங்களது நெல்-3(நவரை), கரும்பு, கம்பு, எள். மரவள்ளி, மிளகாய் மற்றும் வாழை ஆகிய பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளவும், இது குறித்தான மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ். கேட்டுக்கொண்டுள்ளார்.





















