கும்பகோணம், ஜன. 6 –
108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவம் 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.
அதேப்போன்று, இவ்வாண்டும் இவ்விழா இன்று காலை கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர மேள தாளம் முழங்க கருடாழ்வார் திருவுருவ வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பிரம்மோற்சவ நாட்களில், நாள்தோறும் சுவாமி பிரகார உலா நடைபெறுகிறது,
விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பொங்கல் திருநாளான 14ம் தேதி வியாழக்கிழமை கொரோனா தொற்று அரசு விதிமுறைகள் படி, தை தேரோட்டத்திற்கு பதிலாக திருக்கோயில் பிரகாரத்தில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





















