உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனையை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை அக்.3-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (02.10.2021) உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் உத்தமர் காந்தியடிகள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை கதர் கிராமத் தொழில்கள் மூலம் காதி விற்பனை நிலையத்தில் காதி கிராப்ட் தயாரிப்பான வேம்பு, குறிஞ்சி, சந்தனம், குமரி, கோபுரம் ஆகிய வகையான சோப்புகள், சந்தன மாலை, ஜவ்வாது பவுடர், தேன், சாம்பிராணி, துண்டு, சேலை, வேட்டி, போர்வை போன்ற பொருட்கள் மற்றும் துணி வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கான கதர் விற்பனை இலக்கு கடந்த ஆண்டு ரூ.82.11 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டு, அதனை விட அதிகமாக ரூ.83.60 இலட்சம் எய்தப்பட்டது. மேலும், தற்போது 2021-2022 ஆம் ஆண்டிற்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ரூ.82.11 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணல் காந்தி காந்தியடிகளின் 153-வது பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு 30மூ சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், பொது மக்கள் அனைவரும் நமது பாரம்பரியமான கதர் ஆடைகளை வாங்கி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.முத்துக்குமரசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., திருவண்ணாமலை கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் திரு.அ.மு.சீனுவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.