திருவண்ணாமலை, ஆக.8-
திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலபாதை சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுறுத்தலின் பேரில் எஸ்.ஆர்.எம். பல்நோக்கு மருத்துவமனை, விஷன் பேரா மெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய கொரோனா பெருந்தொற்று சமூக விழிப்புணர்வு முகாம், நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு முதல்வர் எப்.ஜெயராஜ் தலைமை தாங்கினார். டாக்டர்கள் எம்.ராஜ்கிரண், ச.அருண், எஸ்.தீபக் ஆகியோர் முன்னிலை வகிக்க நிர்வாக இயக்குநர் இ.விநாயகம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சேர்மன் ஆர்.ரேணுகோபால் கொரோனா சமூக விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்து இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் பயணம் மேற் கொண்ட பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய தோடு முகக்கவசம் கையுறை, கிருமிநாசினி சோப்பு உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கிய அவர் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் கொரோனா என்ற நோயிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து மருத்துவக்குழுவினர் முன்னிலையில் விஷன் பேராமெடிக்கல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள், பணியாளர்கள் கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பொது மருத்துவர், ஹோமோதிபதி பல்மருத்துவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.